Latest News

Tuesday, 10 February 2015

Tamil

தூத்துக்குடி அருகே வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்தது: உடல் நசுங்கி 3 பேர் பலி

தூத்துக்குடி அருகே வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மட்டக்கடை முத்துசாமி தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (38). இவரது மனைவி ராஜலட்சுமி (35). இவர்களுக்கு 1½ வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்றிரவு வீட்டின் கீழ்தளத்தில் படுத்திருந்தனர். வீட்டின் மேல் தளத்தில் தங்கவேலின் தாய் லட்சுமி மற்றும் அவரது சகோதரி முத்து ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறை மற்றும் சமையலறை கட்டிடத்தின் மேல்பகுதி திடீரென இடிந்து கீழ்தளத்தில் உள்ள படுக்கையறை பகுதியில் விழுந்தது. இதில் படுக்கையறையின் மேல்பகுதி இடிந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த தங்கவேல், ராஜலட்சுமி, குழந்தை ஜனனி ஆகியோர் மீது விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேல்மாடியில் இருந்த லட்சுமி, முத்து ஆகியோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட், அனல்மின் நிலைய தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சுமார் 25–க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 3 பேர் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்


கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, இந்த ஆண்டும் அதிகரித்துள்ளது.
 இந்த முறை விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகம் என்றும், வழக்கம்போல் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
 தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இம்முறை முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டது. வழக்கமாக பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப விநியோகமும், சேர்க்கை நடைமுறைகளும் அரசு கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும்.
 இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில், அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டது.
 பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் மே 20-ஆம் தேதியோடு முடிவடைந்தது. சில அரசு கல்லூரிகள் மே 21-ஆம் தேதி வரையிலும், சில தனியார் கல்லூரிகள் மே 22-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் அளித்துள்ளன.
 இந்த நிலையில், புதன்கிழமை (மே 20) வரையிலான நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
 இது குறித்து சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி முதல்வர் கே.ஆர். சீதாலட்சுமி கூறியது:
 விண்ணப்ப விநியோகம் புதன்கிழமையோடு (மே 20) முடிவடைந்த நிலையில், மாலை 5 மணி வரை 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.
 இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த 2014-15 கல்வியாண்டில் சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்களே விநியோகமாகின.
 மேலும், கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் படிப்பில் மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் 210 இடங்கள் உள்ளன. இதற்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.
 ராணி மேரி கல்லூரி முதல்வர் ஆர். அக்தர் பேகம் கூறியது:
 விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு (மே 21) முடிவடைய உள்ள நிலையில், புதன்கிழமை வரை நிலவரப்படி 13,500 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. கடந்த ஆண்டு மொத்தமாக அனைத்துப் படிப்புகளுக்கும் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் அளவுக்கே விநியோகமாகின.
 விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையும் நடைபெற உள்ளதால், விற்பனையாகியுள்ள மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு உள்ளது.
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தொடர்ந்து சமர்ப்பித்து வருகின்றனர். இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் பி.காம். படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்திருக்கின்றனர். சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்தப் படிப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர ஆர்வம் காணப்படுகிறது என்றார். இதே கருத்தை சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாளும் தெரிவித்தார்.
 இதுபோல் வியாசர்பாடி அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி, பர்கூர் அரசு கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், சென்னை கல்லூரி சாலை, அரும்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளை விட அதிகமாக விற்பனையாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கல்லூரிகளிலும் பி.காம். படிப்புக்கே மாணவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் மேலும் கூறியது:
 இம்முறை தனியார் கல்லூரிகளுக்கு இணையாக, அரசு கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டது மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 ஏனெனில், அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிகரித்திருக்கிறது. விண்ணப்பிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, படிப்பு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நூலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


நூலகங்களில் போதிய நூலகர்களும் இல்லை, அடிப்படை வசதிகளும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் கிளை நூலகங்கள் பொது நூலகத் துறையின் கீழ் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன.இந்த நூலகங்களில் நூலகர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமலும், புதிய நூல்கள் வாங்காமலும், அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும் இல்லாமலும் சீர்கெட்டு உள்ளன.ரூ.60 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம் இப்போது எந்த நிகழ்சிகள் நடத்தவும் அனுமதி தராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்பு பொது நூலகத் துறையின் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி முடிய தேசிய நூலக வார விழா கொண்டாடுவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்கள் நடத்தும் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்லாயிரக் கணக்கானவர்கள் நூலகவியலில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.ஆனால், பொது நூலகத் துறையில் ஆயிரக்கணக்கான நூலகர் பதவிகள் காலியாகவே உள்ளன.சென்னையில் நகரில் உள்ள சுமார் 150 கிளை நூலகங்களில் 60-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களில் நூலகர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. கன்னிமாரா பொது நூலகத்தில் 150 பணியாளர்களும், நூலகர்களும் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது வெறும் 22 பேர்தான் பணியாற்றுகின்றனர். இதுபோன்ற நிலைமை நீடித்தால் நூலகப் பணிகள் எப்படிச் செம்மையாக நடைபெறும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம்


பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர்  கலந்து கொண்டுள்ளனர். இந்த செயற்குழுக் கூட்டத்தில் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாஜகவை மேலும் பலப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைவு



தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 72 குறைந்துள்ளது. சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 9 குறைந்து 2,505க்கும்  சவரன் ஒன்றிற்கு ரூ. 72 குறைந்து ரூ. 20,040க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 10 குறைந்து ரூ. 2,679க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வெள்ளி கிராம் விலையில், எவ்வித மாற்றமுமின்றி ரூ. 40.90 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 15 குறைந்து ரூ. 38,195 என்ற அளவில் உள்ளது.

விருதுநகரில் மாரியம்மன் திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இவ்விழாவின் உச்சக் கட்ட நிகழ்ச்சியான பக்கதர்கள் நேர்ச்சை செலுத்தும் வகையில் அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் இரவு அம்மனுக்கு பல்வேறு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதில், இந்து நாடார் தேவஸ்தானத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.15 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் வாகனங்களில் புறப்பாடும், வெவ்வேறு மண்டபங்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5-ம் தேதியும், 6-ம் தேதி கயிறு குத்துதல் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் அக்னிச் சட்டி எடுத்தலும், 7-ம் தேதி தேரோட்ட திருவிழாவும் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஏப்.12-ம் தேதி வரையில் அம்மனுக்கு மண்டகப்படி வழங்கி வழிபாடு நடைபெறும்.
இவ்விழாவை முன்னிட்டு கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொருள்காட்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

செல்போன் கட்டணத்தை உயர்த்த தொலை தொடர்பு நிறுவனங்கள் முடிவு



செல்போன் கட்டணம் உயர்த்த தொலை தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள்  28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு உடனடியாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த தொகையை வரும் 31–ந்தேதிக்குள் செலுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த  10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையை குறைக்க செல்போன் கட்டணத்தை உயர்த்த  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. 
இதற்கிடையே செல்போன் கட்டணத்தை கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக உயர்த்தக்கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆற்காடு  பாலாற்றில் மணல் கடத்திய மினிவேனை பறிமுதல்


ஆற்காடு  பாலாற்றில் மணல் கடத்திய மினிவேனை  பறிமுதல் செய்து வெள்ளிக்கிழமை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆற்காடு பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராணிப்பேட்டை கோட்டாச்சியர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பாலாற்றிருந்து வந்த மினிவேனை ஒட்டவந்த ஓட்டுநர் அதிகாரிகளை கண்டதும் நிறுத்திவிóட்டு தப்பி  ஒடிவிóடடார் அதனை சோதனை செய்யபோது அதில் மணல் கட்டத்தியது தெரியவந்தது.அந்த வேனை பறிமுதல் செய்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.
மாணவ/மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும்.
தமிழ் நாட்டைச் சார்ந்த அனைத்து மாணக்கர்களும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள் ஆவர். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
தகுதிபெற்ற மாணக்கர்கள் இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்  ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் தகுதி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, இப்பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும், நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000/- வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் பற்றி விவரம் இப்பயிற்சிமைய இணைய தளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முதல்வர்,

ஐஏஎஸ் அதிகாரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை: பாஜக உள்ளிருப்புப் போராட்டம்


கர்நாடகாவில், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரி ரவி கொலை வழக்கு கர்நாடகாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து வழக்கை புலனாய்வு காவல்துறைக்கு மாற்றி முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டார்.
எனினும், இதனை ஏற்க மறுத்த பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் நேற்று முதல் சட்டப்பேரவைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி கொல்கத்தா வருகை

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி அப்துல் பஷித் 3 நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தார்.இந்த பயணம் குறித்து பாகிஸ்தான் தூதரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மேற்கு வங்கம், பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களுக்கிடையே நல்லுறவுகள் வலுபெற மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.இந்தியாவும், பாகிஸ்தானும் ஜனநாயக மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை கடைப்பிடிக்கும் நாடுகள். எல்லா நிலைகளிலும் இருதரப்பு உறவுகள் வலுப்பெற கூட்டாட்சித் தத்துவம் இன்றியமையாதது.பரஸ்பர நலன்கள், இறையாண்மை, சமத்துவம் உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவுடனான சுமுக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. 
இரு நாடுகளிடையே உள்ள அனைத்து சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு காண இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் அவசியமாகும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொல்கத்தா வந்துள்ள பஷித்துக்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி நிறுவனத்தில் அவர் உரையாற்றவுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யுவராஜ் இடம்பெறாததற்கு காரணம்.. மனம் திறந்த தோனி


ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான் பந்து வீச்சில், திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சை பெரிதும் பாதிக்கப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் பேட்டிங்கில் மட்டுமல்லாது, 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகனாக ஜொலித்தார். ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர் இடம் பெறவில்லை.
ஐந்து ஃபீல்டர்கள் எப்போதுமே உள் வட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வகையில், ஐசிசி விதிமுறைகளைத் திருத்தியுள்ளது.  இது யுவராஜ் போன்ற பகுதி நேர பந்துவீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் தோனி.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: விதிமுறைகளைத் திருத்திய பின் யுவராஜ் சிங் அதிகமாக பந்துவீசவில்லை. அவர் டி-20 ஆட்டங்களில் பந்து வீசியிருந்தாலும், இந்த விதிகள் அவரது பந்துவீச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்க வேண்டும்.
விதிகளைத் திருத்தும் முன் சச்சின், சேவாக், யுவராஜ் ஆகியோர் அதிகளவு பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சை பெரிதும் சார்ந்திருந்தோம். அதேநேரத்தில் அவர்கள் அனைவரும் பகுதிநேர பந்துவீச்சாளர்கள். பேட்டிங் ஆடுகளங்களில் அவர்களால் சிறப்பாக பந்துவீச இயலாது.
ஆடுகளம் ஒத்துழைத்தால் சுரேஷ் ரெய்னா நன்கு பந்துவீசுவார். குறிப்பாக, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் சரியான இடத்தில், சரியான வேகத்தில் பந்துவீசுவார். ஷிகர் தவண், ரோஹித் கூட பகுதி நேர பந்துவீச்சாளர்கள்தான். ஆனால், இடத்தைப் பொருத்து அவர்களைப் பயன்படுத்துவேன்.
யுவராஜ் ஆரம்பத்தில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். அந்த இடத்தில் நன்றாக ஆடியதால் நான்காவது இடத்துக்கு முன்னேறினார். 2005-க்குப் பிறகு அவர் நான்காவது இடத்திலும் முகமது கைஃப் அல்லது சில சமயங்களில் நானும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினோம்.
தற்போது ரெய்னா ஐந்தாவது இடத்தில் ஆடி வருகிறார். இது முக்கியமான இடம். ரெய்னாவும், யுவராஜும் வேறு வேறு இடத்தில் களமிறங்கியதால், இருவரையும் ஒப்பிடுவது தவறு. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆல் ரவுண்டர்கள் ஜொலிப்பதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றார் தோனி.

கிளம்பியது புதிய பூதம்: அரசு காலண்டரில் தியாகிகளாகியுள்ள இந்திரா கொலையாளிகள்


ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள நானாக்சகி காலண்டரில், இந்திரா காந்தியை கொன்ற கொலையாளிகள் தியாகிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பஞ்சாபில் வெளியாகியுள்ள இந்த காலாண்டருக்கு பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி விளக்கம் கோரியுள்ளது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த காலண்டரில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளும், ராணுவ முன்னாள் தளபதி வைத்யாவைக் கொன்றவர்களும் தியாகிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே கண்மாய்க்குள் விழுந்த பெண் சாவு

விருதுநகர் அருகே கண்மாயில் துணி துவைக்கச் சென்ற பெண் கால் தவறி விழந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மனைவி மாரீஸ்வரி(35). இவர் காலையில் அருகிலுள்ள கடமங்கலம் கண்மாய் உள்பகுதி கிடங்கில் துணிகளை துவைப்பதற்காக சென்றாராம். அப்போது, எதிர்பாரதவிதமாக  கால் தவறி வழுக்கி கிடங்கிற்குள் விழுந்தாராம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் மூச்சுத்தினறி உயிரிழந்தாராம்.
இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்

மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் 72 வயதாகும் கன்னியாஸ்திரி ஒருவர் மர்ம கும்பலால், பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், பள்ளியின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.13 லட்சம், மடிக்கணினி, செல்போன்கள், கேமராக்களை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பத்தால் படுகாயமடைந்த கன்னியாஸ்திரி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதனை கொண்டு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குற்றவாளிகள் 4 பேர் அடங்கிய காட்சிகளையும் போலீசார் சி.சி.டி.வி. பதிவில் இருந்து பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றவாளிகள் குறித்து சரியான தகவலை தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

தென்னிந்தியப் பெண்கள் குறித்து கருத்து: மன்னிப்புக் கேட்க மறுத்த சரத் யாதவ்


தென்னிந்தியப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சரத் யாதவ் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் காப்பீட்டுத் துறை சீர்திருத்தம் மசோதா மீதான விவாதத்தில் வியாழக்கிழமை சரத் யாதவ் பங்கேற்றுப் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: "காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக மத்திய அரசு உயர்த்துகிறது. இங்கு சிலர் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர். நம் நாட்டில் கருப்பு நிறமுடைய ஆண்கள் பலர் உள்ளனர். தென்னிந்தியப் பெண்கள் அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களின் நிறமும் அழகானது. அவர்களுக்கு நடனமாடவும் தெரியும். நிர்பயா ஆவணப்படம் எடுத்த, லெஸ்லி உட்வின்கூட வெள்ளைத் தோல் நிறத்தைக் கொண்டவராக இருந்ததால்தான் அவருக்கு சிறையில் ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழகான பெண்களுக்குத்தான் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன' என்றார் சரத்யாதவ்.
எதிர்ப்பு: சரத் யாதவ் இக்கருத்தை வெளியிட்ட போது அவையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழி உள்பட பல்வேறு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவர்களைப் பொருள்படுத்தாமல் சரத் யாதவ் தொடர்ந்து பேசினார். இந்நிலையில், அவர் வெளியிட்ட கருத்து வெள்ளிக்கிழமை சர்ச்சையாக வெடித்தது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி "சரத் யாதவின் பேச்சை, தென்னிந்தியப் பெண்களைப் பற்றியதாக மட்டுமே கருதக் கூடாது. அது பொதுப்படையாக பெண்களை விமர்சிக்கும் பேச்சு. பெண்கள் நுகர்பொருள் கிடையாது. பெண்களை வண்ணத்தின் அடிப்படையில் வர்ணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சரத் யாதவ் போன்ற மிக மூத்த தலைவரிடம் இருந்து இக்கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்தும் சரத் யாதவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். "சரத் யாதவ் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார் அவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லாவும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில், சரத் யாதவின் கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறினார்.
ஆனால், "நான் தவறான எக்கருத்தையும் வெளியிடவில்லை. யதார்த்த நிலையைத்தான் வெளிப்படுத்தினேன். அதனால், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை' என்றார் சரத் யாதவ்.

கடலில் தத்தளித்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மீட்பு


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து கடலுக்குள் சென்ற மீனவர்களில் வியாழக்கிழமை கரைக்குத்திரும்பாத 3 பேர் வெள்ளிக்கிழமை சக மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
ஜெகதாப்பட்டினத்திலிருந்த  142 படகுடன் 500 மீனவர்கள் புதன்கிழமை  கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுவிட்டு வியாழக்கிழமை கரைக்குத்திருப்பினர். அதில், சிவபொருமாள் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற, பூவரசன்(55), மூர்த்தி(50) ஆகிய 3 பேர் மட்டும் கரை திரும்பவில்லை. இதையடுத்து  சகமீனவர்கள் வெள்ளிக்கிழமை  தனித்தனி  படகுகளில் தேடிச் சென்றனர்.  அப்போது, 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் இயந்திரம் பழுதாகி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள்  மூன்று  பேரையும் மீட்டு கரை சேர்த்தனர்.

சாலை விபத்து சிசிடிவி கேமராவால் கொலை வழக்காக மாறிய சம்பவம்


சென்னையில் நடந்த சாலை விபத்து ஒன்று, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக கொலை வழக்காக மாறியுள்ளது.
கடந்த 9ம்தேதி சென்னை கொத்தவால்சாவடியில் வரதையன் என்பவர் லாரி மோதி உயிரிழந்ததாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், வரதையனை, ராஜமாணிக்கம் என்பவர் கொலை செய்த காட்சிகள் பதிவாகியிருந்தது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை அடுத்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்
இலவச தியானப் பயிற்சி: பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலம்
ஏற்பாடு, காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவர் கோயில், மாலை 4.
இயந்திரவியல் தேசியப் பயிலரங்கம்: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு
பொறியியல் கல்லூரி, பொன்னேரிக்கரை, காலை 9.30.
வேதியியல் தேசிய பயிலரங்கம்: சங்கரா பல்கலைக்கழகம், ஏனாத்தூர், காலை 10.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி: தில்ஷன், சங்ககாரா சதங்கள் உதவியுடன், 363 ரன்கள் குவித்த இலங்கை! 

 

ஹோபர்ட்: ஸ்காட்லாந்துக்கு எதிராக டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 363 ரன்களை குவித்தது. சங்ககாரா மற்றும் தில்ஷன் ஆகியோரின் சதங்கள், இலங்கை ரன் குவிப்புக்கு பக்க பலமாக இருந்தது.
ஆஸ்திரேலியாவின், ஹோபர்ட் நகர மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதிவருகின்றன.
டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. திரிமன்னே மற்றும், தில்ஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தில்ஷன் அதிரடி காண்பித்தாலும், ஸ்காட்லாந்து பந்து வீச்சில், திரிமன்னேமிகவும் திணறினார். 21 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 21ஆக இருந்தது. இதன்பிறகு, தில்ஷனுடன் ஜோடி சேர்ந்தார், குமார் சங்ககாரா. இந்த ஜோடி, ஸ்காட்லாந்து பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், ஸ்காட்லாந்து பவுலர்கள் திணறினர். அடுத்தடுத்து இவ்விருவருமே செஞ்சுரி அடிக்க, அரங்கத்தில் குவிந்திருந்த இலங்கை ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. அதிலும், குமார் சங்ககாரா, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அடித்த நாலாவது சதம் இதுவென்பது சிறப்பு. இதன்பிறகு 104 ரன்களில் தில்ஷன் அவுட் ஆன நிலையில், 124 ரன்களில் சங்ககாராவையும், 2 ரன்களில் ஜெயவர்தனேவையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார் ஜோஸ் தாவே. இருப்பினும், கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில், 51 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 363 ரன்களை குவித்தது. இன்னும் சிறிது நேரத்தில் ஸ்காட்லாந்து தனது விரட்டலை தொடங்க உள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/sl-won-the-toss-elected-bat-222500.html

 

 

மோடியின் பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்: தமிழிசை


பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி முதல் 3 நாள்கள் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்வது இதுவே முதல் முறையாகும்.தமிழர்களிடம் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத நாடு இலங்கை. பிரதமரின் பயணத்துக்கு முன்பு அங்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தலைவர்களுடன் விரிவாக பேச்சு நடத்தியுள்ளார்.இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எல்லைத் தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என பேசிதற்காக ரணில் விக்ரமசிங்கே வருத்தம் தெரிவித்ததையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சி அதிகாரம் இருந்தும் அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது மோடியின் இலங்கை பயணத்தை குறை சொல்கிறார்கள்.இலங்கைப் பிரச்னையை அரசியலாக்கி தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் கிடைக்கவிருக்கும் நல்ல தீர்வை கெடுத்துவிட வேண்டாம் என தமிழக அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டனர். மோடி ஆட்சி அமைந்த பிறகு தமிழக மீனவர் ஒருவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள மீனவர் பிரச்னைக்கும், இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கவும் பிரதமர் மோடியின் பயணம் வழிவகுக்கும். மோடியின் இந்த முயற்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இன்றைய லீக் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா (64) ரன்களுக்கும், தவாண் சதமடித்து சரியாக 100 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு வந்த கோலி (44), ரஹானே (33) ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக போர்ட்டர் பீல்டு, பால் ஸ்டிரிலிங் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்து கொடுத்தனர். போர்ட்டர் பீல்டு 67 ரன்களுடனும், பால் ஸ்டிரிலிங் 42 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஆனால் அதை பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. நியல் ஓ பிரையன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 75 ரன்கள் எடுத்தார்.களமிறங்கிய 
முடிவில் அயர்லாந்து அணி 49 ஓவர்களுக்குள் 259 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு 260 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்களும், அஸ்வின் 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அன்பழகன் மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் புதிய மனு தாக்கல் செய்தார். அவர் அளித்த மனுவில் ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,அன்பழகனின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும்: ராமதாஸ்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு பள்ளிஆசிரியர்களின் இந்த கோரிக்கைகள் நியாயமானவை; நிறைவேற்றப்பட வேண்டியவை  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏழை- எளிய மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டதோ, அதேபோல், அரசு ஊழியர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளில் முதன்மையானது ஓய்வூதியம் பெரும் உரிமை ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு அவர்களின் கடைசி வாழ்நாள் வரை ஓய்வூதியமும், அவருக்குப் பின் அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைத் துணைக்கும் சமூகப்பாதுகாப்பு உறுதி செய்யப் படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதே தெரியவில்லை. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபின் இதுவரையில் அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? என்பதே தெரியவில்லை.

இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவிகள், பேருந்து ஓட்டுநர்கள் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில், பொதுத் தேர்வை எழுதிவிட்டு பள்ளி மாணவிகள் வந்த பேருந்து மீது இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவி ஒருவர் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
பள்ளி மாணவிகள் வந்த பேருந்துகளை இடைமறித்து பைக்கில் வந்த இளைஞர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். அவர்களை திட்டிய பேருந்து ஓட்டுநர்கள் மீது இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் காயமடைந்தனர். பள்ளிப் பேருந்து மீது கல்லெறிந்து மாணவர்கள் நடத்திய தாக்குதலில் மாணவிகள் சிலரும் காயமடைந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரியாபட்டி அருகே ரூ.1.70 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது வழக்கு பதிவு

காரியாபட்டி அருகே நிலம் வாங்கி பணம் கொடுக்காமல் ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது புதன்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்   மகன் மலையடியான்(40). இப்பகுதியில் இவருக்குச் சொந்தமான 110 சென்ட் நிலம் உள்ளது. இக்குறிப்பிட்ட நிலத்தை காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த மாரநாடு மகன் செந்திக்குமார் என்பவருக்கு ஒப்பந்தம் பேசியுள்ளனர். அதை உறுதி செய்து கொள்வது போல் முன்பணமாக ரூ.20 ஆயிரமும் மலையடியான் பெற்றுக் கொண்டாராம்.
இந்நிலையில் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்தும் கொடுத்துள்ளார். அப்போது, நிலத்திற்கான தொகையாக ரூ.1.70 லட்சத்தை அரசுடமை வங்கியின் காசோலையாக அளித்துள்ளார். இதை வங்கியில் கொடுக்காமல் ரொக்கப் பணம் கொடுத்ததும் திருப்பிக் கொடுக்கும் படியும் செந்தில்குமார் கூறினாராம். ஆனால், குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னரும் பணம் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தாராம். இந்நிலையில், செந்தில்குமாரை நேரில் சந்தித்து பணம் கேட்டாராம், அதற்கு அடிக்கடி தொல்லை தரக்கூடாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் மலையடியான் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1டி என்ற செயற்கைகோள்  கவுண்ட்டவுன் வரும் 7ம் தேதி துவக்கம்


இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை கடல்சார் காண்கணிப்பு குறித்த ஆய்வுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1டி என்ற செயற்கைகோள் வரும் 9 ம்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 
ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ள  59 மணி நேர ”கவுண்ட்டவுன்” 7–ந் தேதி காலை 7.35 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவின் சொந்த செயற்கைக்கோளன இது  1,400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கால்நடை, மீன்வளத் துறை செயலராக அசோக்குமார் அங்குரனா பொறுப்பேற்பு

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கால்நடை, பால்பண்ணை, மீன்வளத் துறையின் செயலராக அசோக் குமார் அங்குரனா பொறுப்பு ஏற்று உள்ளார்.

இப்பதவியில் இருந்த அனுப் குமார் தாக்கூர் ஓய்வு பெற்றதை அடுத்து அசோக் குமார் இப்பொறுப்பை ஏற்று உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1980ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப்பணி தொகுப்பை சேர்ந்த அசோக் குமார் மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு உயர்நிலை பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மக்கள் செயல்பாடு மற்றும் ஊரக தொழில்நுட்பத்திற்கான மேம்பாட்டு மையத்தின் துணை தலைமை இயக்குனராக பணிபுரிந்ததுள்ளார். இந்த புதிய நியனமத்திற்கு முன்பு, அவர் பஞ்சாய்த் ராஜ் அமைச்சகத்தின் செயலராக பணிபுரிந்தார்.

நதி நீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்: எச்.ராஜா



நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு, மட்டுமின்றி  மாநிலங்களின் அனைத்துத் திட்டங்களுக்கும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார் பாஜகவின் தேசியச்செயலர் எச்.ராஜா.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற அக்கட்சியின்  நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர்மேலும் கூறியதாவது:
நேரடி அந்நிய முதலீடு இந்தியாவில் மிக குறைவாக இருப்பதற்கு இந்தியாவில் தொழில் தொடங்க, வெளிநாட்டினர் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். வெளிநாட்டினர், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.  அதற்காக முதலீட்டாளர்களின் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து முடிவெடுத்தல், ஒரே ஒரு முறை பதிவு செய்யும் முறை போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அப்போது தான் நாட்டில் வேலைவாய்ப்புகளை நாம் அதிகரிக்க முடியும். முதலீடு, வர்த்தகம் தொடர்பாக உலகின் 182 நாடுகளின் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் உள்ளதாக சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் முதல் 50- இடத்துக்குள் இந்தியாவைக் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட,தேவையற்ற 17 ஆயிரம் சட்டங்களை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு, மட்டும் இல்லமால் அனைத்து மாநில திட்டங்களுக்கும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.  கடந்த சில நாட்களுக்கு முன் கடலில் இரு நாட்டு மீனவர்களிடையே நடந்த மோதலால் தமிழக மீனவர்கள் 86 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில விடுதலை செய்யப்படுவார்கள். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் விரைவில்இலங்கை செல்ல உள்ளார்.  அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் இலங்கைக்குச் செல்கிறார்.அப்போது  மீனவர்களின்  பிரச்னை குறித்து உரிய தீர்வு காணப்படும். அதுவரை தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் போது இருநாட்டு நல்லுறவையும் பாதிக்காதவாறு மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ள பட்ஜெட்டின் மூலமாக விலைவாசி கட்டுக்குள் இருக்கும். பொருளாதார வளர்ச்சி 8.5 சதவிகிதத்துக்கு உயரும். சிறுகுறு தொழில்களை ஊக்கும் விக்கும் விதமாக ரூ.20ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கீடு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வை பொறுத்தே  பெட்ரோல், டீசல் விலை  உயர்ந்துள்ளது. விலை உயர்ந்துள்ளதால் விலை வாசி உயரும் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
2016 -ம் ஆண்டில் வரும் தமிழகத் தேர்தலில், அப்போதுள்ள சூழ்நிலையைப் பொறுத்தே முடிவுகளை அறிவிக்கும்.  தில்லி தேர்தல் முடிவால் பாஜகவுக்குகு எந்தப் பின்னடைவும் இல்லை. காங்கிரசின் வாக்குகள் தான் ஆம்ஆத்மிகட்சிக்குக்கிடைத்துள்ளதே தவிர பாஜகவின் வாக்குகளை அல்ல. எனினும் தோல்விக்கான காரணம் குறித்து பாஜக ஆராய்ந்துவருவதாகவும்தெரிவித்தார்.கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப.செல்வகுமார் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துக்கொண்டனர்.

அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்


அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், விபத்தில் இறந்தால் நஷ்ட ஈடு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் இந்தச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசு தொழிலாளர் நல வாரியம் கீழ் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு காலத்தாமதமின்றி வழங்க வேண்டும்.
இந்தத் உதவித் தொகை வழங்குவதில் காலத்தாமதம் ஆகிறது.திட்ட வரைவுகள் படி நிதி ஒதுக்காததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாகும். தொழிலாளர்களின் பதிவு சான்றுகளை முன்பு தொழிற்சங்கத் தலைவர்கள்தான் உறுதி செய்தனர். தற்போது, கிராம நிர்வாக அதிகாரிகளால் சான்றளிக்கப்படுவதால், இந்தக் காலத்தாமதம் ஆகிறது. எனவே, திட்ட வரைவுகளின் படி குறித்த காலத்தில் நிதி ஒதுக்க வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்பட்டால், ஒரு சில சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கும். ஆனால் இந்த சட்டத்தை தமிழகம் உள்ட எந்த மாநிலமும் சரிவர அமல்படுத்தவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணி


தமிழ்நாடு செய்தி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், இணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager(Secretarial)
சம்பளம்: மாதம் ரூ.23,500 - 29,500
Assistant Manager(Secretarial)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 24,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐ.சி.எஸ்.ஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது சயீது பதவியேற்றார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 12வது  முதல்வராக முஃப்தி முகமது சயீது இன்று  பதவியேற்றார். அவருக்கு வயது 79.  துணை முதல்வராக பா.ஜ.,வின் நிர்மல்சிங்கும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஆளுநர்  வோரா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி மற்றும்  பா.ஜ.,வின் மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக பிடிபிக்கும், பாஜகவுக்கும் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முஃப்தி முகமது சயீது வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது, ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முஃப்தி அழைப்பு விடுத்தார். அதை மோடி ஏற்றுக் கொண்டார். ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், பிடிபி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, மாநிலத்தில் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்தப் பேச்சுவார்த்தையில் அண்மையில்தான் சுமூக முடிவு எட்டப்பட்டது. அதையடுத்து, இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கின்றன.

சட்டக் கல்லூரியில் மோதல் சம்பவம்: 11 மாணவர்கள் தாற்காலிக நீக்கம்


சென்னை பாரிமுனையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக 11 மாணவர்களை தாற்காலிக நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டித் தகராறு கடந்த 25-ம் தேதி ஏற்பட்டது.  தகராறு முற்றவே மாணவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  மேலும் இந்த மோதல் குறித்து மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர். புகார் குறித்து விசாரணை செய்த கல்லூரி நிர்வாகம், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் செய்தது.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் 18  மாணவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்தனர். இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இரு தினங்களுக்கு முன்பு வழக்கில் தொடர்புடைய 7 மாணவர்களை தாற்காலிக நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே சட்டக் கல்லூரி மாணவர்கள் எல்.பூபாலன், ஆர்.ஜெகன், ஏ.ஆதில் அகம்மது, ஜி.சூர்யாபிரகாஷ், ஏ.ஜெயகுமார், ஏ.சல்மான்கான், எஸ்.அரவிந்த், ஜே. முகம்மது ஆசிக், ஆர்.பாலமுருகன், ஏ.பாலு, எஸ்.மணிகண்டன் ஆகிய 11 பேரையும் தாற்காலிக நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு : ஹிஸ்புல் பயங்கரவாதிகள் இருவர் பலி


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.
தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில், ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கழிவு நீரை அகற்றும் பணிக்கு மகளிர் குழுக்கள் மூலம் ஆள்கள் எடுக்கப்படும்: நகராட்சி தலைவர் மா.சாந்தி

விருதுநகர் நகராட்சியில் தெருக்களில் தேங்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு மகளிர் சுய குழுக்களில் இருந்து ஆள்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார்.  

காமராஜர் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். ஆணையாளர் (பொறுப்பு) மோகன், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு: 

சுகுமார்ராஜன்: நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை அகற்ற நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 109 பேர் மட்டுமே உள்ள நிலையில், போதுமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
நாகேந்திரன்: நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு நகராட்சி மூலம் இலவச குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளனர். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 
கே.ஜெயக்குமார்: தெப்பம் மேற்கு பஜாரில் மழை வாறுகால் அமைக்கப்படாமல் பேவர் கற்கள் பதிக்கும் பணி மேற்கொள்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும், நகராட்சியில் ரூ.70 லட்சம் வரையில் தொழில் வரி நிலுவையில் உள்ளது. அதை வசூல் செய்யவும் வேண்டும் என்றார். 

இதற்கு பதிலளித்து மா.சாந்தி பேசுகையில், துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், ஆள் எடுப்பது தொடர்பாக எந்த அனுமதி கடிதம் வரவில்லை. அதனால் கழிவு நீர் வாய்க்காலில் தேங்கியுள்ள மணலை அகற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களில் இருந்து ஆள்கள்  எடுக்கப்படும். 

நகர்ப்புற குடிமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தெப்பம் பஜார் சாலையில் பேவர் கற்கள் பதிக்கும் சாலையில் இருபுறமும் வாறுகால் அமைப்பதற்கான தொகை நகராட்சி மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நெடுஞ்சாலைத்துறையை கழிவு நீர் வாய்க்கால் அமைக்க அறிவுறுத்தப்படும். தற்போது. தொழில் வரி செலுத்தவோராக குறிப்பிடும் நபர்கள் அந்த இடங்களில் இல்லை. அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிலுவையில் தொகையை வசூலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். 

மேலும், இக்கூட்டத்தில் நகராட்சி வரவு, செலவு மற்றும் வளர்ச்சி பணிகள் குறி்தத தீர்மானங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதில், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

அணைக்கட்டு அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்


அணைக்கட்டு அருகே ஏரிப்புதூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு நரிக்குறவர் குடும்பங்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரிப்புதூர் கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  அவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லையென கூறப்படுகிறது.  அதனால் அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அதற்கு தீர்வு ஏற்படவில்லை.  அதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர் - ஒடுக்கத்தூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணைக்கட்டு போலீஸôர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தமால் நகருக்குள் நுழைய தொகாடியாவுக்கு தடை


ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதிக்குள் விஎச்பி தலைவர் பிரவீண் தொகாடியா நுழைவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
விஎச்பியின் பொன் விழா ஆண்டினை முன்னிட்டு புல்பானியில் மாவட்ட தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகாடியா நாளை உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கருதிய மாவட்ட நிர்வாகம், கந்தமால் நகருக்குள் நுழைய தொகாடியாவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பங்குச்சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவு


மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.61.85 என்ற அளவில் உள்ளது.
அந்நிய செலாவணிச் சந்தையில் மற்ற வெளிநாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்ததால், இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்பட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று முழுமையாகத் தாக்கல் செய்துள்ள முதல் ரயில்வே பட்ஜெட்டில், தென்மாவட்டங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தொழில் வர்த்தக சங்கங்கள், பயணிகள் சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்களுக்காக புதிய ரயில்கள் அறிவிப்பு, இரட்டை ரயில் பாதைத் திட்டம், செங்கோட்டை-புனலூர் ரயில்பாதைப் பணியை விரைவுபடுத்துதல், ரயில்கள் நேர மாற்றம், ரயில்கள் நீடிப்பு தொடர்பான அறிவிப்புகள் அனைத்துத் தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட தொழில் மற்றும் வர்த்தக சபையின் துணைத் தலைவரும், மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ். சந்திரமௌலி கூறியது:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-கன்னியாகுமரி, திண்டுக்கல்-விழுப்புரம் இடையேயான இரட்டை ரயில்பாதை திட்டம்குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. ரயில்வே முன்பதிவில் 112 சதவீதம் காத்திருப்பில் இருக்கும் பகுதியாக தென்மாவட்டங்கள் உள்ள நிலையில், புதிய ரயில்களை அறிவிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது என்றார்.
திருநெல்வேலி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (நெல்சியா) செயலர் சஞ்செய் குணசிங் கூறியது:
கழிப்பறைகள் மேம்பாடு, பெண்களுக்காக சிசிடிவி கேமரா, ரயில்வே பெட்டிகளின் பாதுகாப்பு, ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலங்கள், மூத்த குடிமக்களுக்கு சலுகை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்-லைன் பதிவின்போதே சக்கர நாற்காலி வசதிக்கும் பதிவு, ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்கள் வரவேற்புக்குறியன. இருப்பினும், புதிய ரயில்கள் அறிவிக்கப்படாததும், புல்லட் ரயில், மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது என்றார்.
ராதாபுரம், நான்குனேரி பகுதி ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ். ராஜ்குமார் கூறியது:
தெற்கு ரயில்வேக்கு அதிகப்படியான வருவாயை அளிப்பது தென்மாவட்டங்களின் வழித்தடங்களே. ஆனால், இந்த ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு பகல்நேர ரயில், திருச்சி-திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை கொச்சிவரை நீடிப்பது ஆகியவை அறிவிக்கப்படவில்லை. நான்குனேரி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பூங்காவில் ரயில்வே என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற எங்களது சங்கத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்காக வேறு எந்தப் பகுதியிலும் போதிய இடம் இல்லாத சூழலில் நான்குனேரியில் இடம் இருந்தும் அதற்கான அறிவிப்பு இல்லை என்றார்.
திருநெல்வேலி ரயில்நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜி.வாசு கூறியது:
நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யும் வசதி, பெண்களுக்கு பாதுகாப்பு, தரமான உணவு கிடைக்க ஹைடெக் வசதி, புகார் மற்றும் ஆலோசனைக்கு 24 மணி நேர தொலைத்தொடர்பு வசதி எண்கள் உள்ளிட்ட பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள். இருப்பினும், புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் கூறியது: திருநெல்வேலியில் இருந்து தில்லி, சென்னைக்கான தினசரி ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. செங்கோட்டை-புனலூர் ரயில்பாதை திட்டத்தை விரைவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் கானல் நீராகவே உள்ளது என்றார் அவர்.

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடியது: விஜயகாந்த்


நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியபோது, அவசரச் சட்டத்தால் பெரும் தொழில் அதிபர்கள், நிறுவனங்கள்தான் பலன் பெறுவார்கள். அவசரச் சட்டம் குறித்த அச்சத்தை விவசயிகளுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

சேலம் அருகே அரசு பேருந்தில் தீ விபத்து


சேலத்தில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேலம் மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று  மாலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை மதுரை புறப்பட்டு சென்றது.
சேலத்தை அடுத்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றபோது திடீர் என அந்த பஸ் தீப் பிடித்து எரிந்தது. 38  பயணிகளுடன் சென்ற இந்த பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து  தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்தது.  விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை சின்னத்துடன் கூடிய காரில் வலம் வந்த நபர்கள்: தனியார் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 3 பேர் கைது

சென்னையில் காவல்துறை சின்னத்துடன் கூடிய காரில் வலம் வந்தததாக தனியார் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. அளவிலான அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய 3 நட்சத்திர சின்னத்துடன் கூடிய பலகையுடனும், நீலநிற சுழல் விளக்குடனும், டிஎன் 06 டி 9439 என்ற பதிவு எண்ணுடன் ஆங்கிலத்தில் ஜி என்று குறிப்பிடப்பட்டும் ஒரு ஹோண்டா சிட்டி கார் வந்தது.
அந்த காரை பார்த்த போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த காரை போலீஸார் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதாம். உடனே போலீஸார், அந்த காரை விரட்டிச் சென்று மறித்து நிறுத்தினராம். பின்னர் அந்த காரில் இருந்த  நபரிடம் போலீஸார் விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீஸார் அந்த காரை சோதனையிட்டனர். இச் சோதனையில் அந்த காரில் காவல்துறை அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் அடையாள சின்ன பலகைகள், சுழல் விளக்குகள், கொடிகள் ஆகியவை ஏராளமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து, விசாரித்தனர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் சன்னதி 2-வது தெருவைச் சேர்ந்த ராஜாவடிவேல் (33) என்பது தெரியவந்தது. அந்த கார் ராயப்பேட்டையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமானது என்பதும், அந்த கார் மத்திய அரசு அதிகாரிகள் வாடகைக்கு பயன்படுத்துவதும் தெரியவந்தது.இதில் அரசு அதிகாரிகள் பயன்படுத்தாதபட்சத்தில், அந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள் அடையாள சின்னங்களையும், சுழல் விளக்கையையும், பதிவு எண்ணுடன் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜி என்ற எழுத்தையும், கொடியையும் அகற்றிவிட  வேண்டும் என்ற விதிமுறைகளையும், சட்டத்தையும் மீறி, அந்த காரில் காவல்துறை சின்னங்களும்,சுழல் விளக்கும்,கொடி, பதிவு எண்ணுடன் ஜி என்ற எழுத்து ஆகியவை இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த காரை ஓட்டுநர் ராஜாவடிவேல், அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் 3-வது தெருவைச் சேர்ந்த ஹரி (52), திருவல்லிக்கேணி எஸ்.வி. கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகியோர் பல்வேறு தவறான வழிகளில் பயன்படுத்தியிருப்பதும் போலீஸார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை போலீஸார் ராஜாவடிவேல்,ஹரி,செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து


சென்னை விமான நிலைய உள்நாட்டு வருகை பகுதியில் உள்ள மேற்கூரை திடீர் என சரிந்து விழுந்தது.  முதல் தளத்தில் கண்காணிப்பு கட்டு்ப்பாட்டு அறை அருகே உள்ள மேற்கூரை எதிர்பாராத விதமாக திடீர் என சரிந்து விழுந்த இச் சம்பவத்தில் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

மாலத்தீவு முன்னாள் அதிபரை இழுத்துச் சென்ற காவல்துறை


மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது செய்தியாளர்களிடம் பேச முற்பட்ட முகமது நஷீத்தை அந்நாட்டு காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நஷீத் அதிபராக இருந்தபோது, மூத்த நீதிபதியைக் கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக நஷீத் கைது  செய்யப்பட்டார்.
நீதிபதி அப்துல்லா முகமதைக் கைது செய்ய நஷீத் உத்தரவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, 2012 பிப்ரவரியில் நஷீத் பதவி விலகினார். 2013-இல் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியுற்றார்.
இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை


பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய அளவில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், அதுவரை 743 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 4,185 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 206 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 180 பேர், மத்தியப்பிரதேசத்தில் 99 பேர், தெலங்கானாவில் 46 பேர் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை 225 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு தனியார் ஆய்வுக் கூடங்களில் ரூ. 3,750 கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் செய்தி வந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்ளலாம். இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும். ஆண்டுதோறும் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சலே வராது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியை இலவசமாக வழங்க தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: நாளை தொடக்கம்


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், நாளை தொடங்குகிறது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், 2 அமர்வுகளாக நடைபெற இருக்கிறது. முதலாவது அமர்வு பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், 26 நாள்கள் அவை அலுவல்கள் நடைபெறும். பின்னர், ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, இரண்டாவது அமர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 19 நாள்கள் அவை அலுவல்கள் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது முதலாவது முழுமையான பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவிருக்கிறது. நிதித்துறை, சட்டத் துறைகள் உள்ளிட்டவற்றில் 44 மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டங்களுக்கு எதிராக பிரச்னைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கோட்சே சிலைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை: முதல்வர் ஓ.பி.எஸ்


சென்னை: தமிழகத்தில் கோட்சே சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சட்டசபையில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:
அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான 30.01.2015 அன்று நாடு முழுவதும் நிறுவப்போவதாக அறிவிப்பு செய்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சிலைகளை நாடு முழுவதும் அனுப்ப ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மேற்படி அமைப்பில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கோட்சேயின் சிலைகளை அமைக்கப் போவதாக அறிவித்தனர். மேலும், இவ்விரு பிரிவினரும் காவல் துறையினர் சிலைகளை வைக்க அனுமதி மறுக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக தங்கள் அமைப்பின் அலுவலக வளாகங்களில் கோட்சேவின் சிலைகளை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநில அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிலைகள் அமைக்கும் நாளன்று கோட்சேவின் உருவ பொம்மைகளை மாநிலம் முழுவதும் எரித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இந்திய தேசிய லீக் கட்சியினர் (தடா ரஹீம் பிரிவு) கோட்சே சிலைகள் அமைக்கப்பட்டால் தாங்கள் பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளியான அப்சல் குருவிற்கு நினைவிடம் கட்டுவதாக தெரிவித்தனர். அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் சிலை நிறுவும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி மற்றும் மத ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் 08.01.2015 அன்று திண்டுக்கல்லிலும், இந்திய மாணவர் சங்கத்தினர் 30.01.2015 அன்று கோயம்புத்தூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள் 260 பேர் 30.01.2015 அன்று கோட்சேவின் உருவ பொம்மைகளை கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் 1600 பேரும் 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறையினர் அனுமதி அளிக்காததையடுத்து, இவ்வமைப்பினர் அறிவித்தது போன்று 30.01.2015 அன்று தமிழகத்தில் கோட்சேவின் சிலைகள் எங்கும் நிறுவவில்லை. நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 1008 பெண்கள் பங்கேற்ற சிவநாம அர்ச்சனை


திருவாரூர் தியாகராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகா சிவ ராத்திரியையொட்டி 1008 பெண்கள் பங்கேற்ற சிவநாம அர்ச்சனை நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயி ல், விளமல் பதஞ்சலி மனோகர் கோயில், திருக்கரசவாசல், திருவீழிழிமலை, திருப் பாம்புரம் ராகு,கேது கோயில், திருமீயச்சூர் மேகநாதசுவாமி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவன் கோயில்களில் 4 கால பூஜை விடிய விடிய நடைபெற்றது.
தியாகராஜர் கோயில், கமலாலயக் குளத்தின் நடுவிலுள்ள கோயில் வண்ண விளக்குக ளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசன ம் செய்தனர். தர்ம ரக்சன ஸமிதி சார்பில் மகாசிவராத்திரியையொட்டி தியாகராஜர் கோயில் தேவாசிரியன் மண்டத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) 1008 பெண்கள் பங்கேற் ற சிவநாம அர்ச்சனை நடைபெற்றது.
பூஜையில் அனைத்துப் பெண்களும் பூஜைப் பொருள்களை வைத்து 1008 முறை சிவ நாமத்தை உச்சரித்தனர். அப்போது வில்வம், நொச்சி, மல்லி, கிலுவை உள்ளிட்ட இலைகள் கொண்டு அர்ச்சனை செய்தனர். மாலை 6 மணிக்குத் தொடங்கிய சிவராம அர்ச்சனை இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் விளமல் பதஞ்சலி மனோகர் கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அடையாறில் குதித்த பால் வியாபாரி சடலம் மீட்பு

சென்னை அடையாறில் குதித்த பால் வியாபாரி சடலமாக மீட்கப்பட்டார்.
அடையாறு திரு.வி.க. பாலத்தில் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கதக்க ஒரு நபர் வந்தார். அவர் திடீரென சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு, பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்தார். இதைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து, ரப்பர் படகில் அடையாற்றில் குதித்த நபரை தேடினர். இந்த தேடுதல் பணி புதன்கிழமை காலையும் நீடித்தது.
இந்நிலையில் அடையாறு மல்லிகைபூநகர் அருகே அந்த நபரின் சடலம் மிதந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று, அந்த நபர் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் இறந்தவர், ராஜா அண்ணாமலைபுரம் அன்னை தெரசாநகரைச் சேர்ந்த பால் வியாபாரி ஆறுமுகம் (45) என்பது தெரியவந்தது.
குடும்ப பிரச்னையின் காரணமாக அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

தேமுதிகவின் கொடி நாள்: கட்சியினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்


தேமுதிகவின் கொடி நாளை கட்சியினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேமுதிக அரசியல் இயக்கமாகத் துவங்குவதற்கு முன்பே புரட்சி தீபம் தாங்கிய தேமுதிகவின் மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டது. இந்தக் கொடி தமிழகம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கிறது. கொடி உருவாகி 15 ஆண்டுகளைக் கடந்து, மக்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தேமுதிகவின் கொடி நாள் பிப்ரவரி 12-ஆம் தேதியாகும்.இந்த நாளில் தேமுதிகவினர் தமிழகம் முழுவதும் கொடியேற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.கொடி நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும்.
ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னலமற்ற முறையில் தொண்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஒரு புதிய அரசியலைத் தந்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Recent Post